shadow

ஹாம் ரேடியோ நிலையம் ராமேசுவரத்தில் அமைக்க வேண்டும்: கடல்சார் பேரழிவுகளைத் தடுக்கும் நோக்கில் செயல்படுத்தக் கோரிக்கை!

தமிழகத்தில் கடல்சார் பேரழிவு களைத் தடுக்கும் வகையில் ராமேசுவரத்தில் ஹாம் ரேடியோ நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

கடந்த 22.12.1964-ம் தேதி தனுஷ்கோடியை புயல் தாக்கியதில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல்போனது. அப்போது ராமேசுவரத்தில் இருந்த தொலைபேசி, தந்தி கம்பங்கள் முழுமையாக புயலில் சாய்ந்து விழுந்துவிட்டதால் வெளி உலகத்துக்கும் ராமேசுவரம் தீவுக்கும் இடையேயான தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் புயலில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறித்தும் சேதங்களின் விவரங்கள் குறித்தும் உடனடியாக அப்போது சென்னைக்குத் தெரியவில்லை.
ஹாம் வானொலி கருவிகள்
நாட்டின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் மண்சரிவு, பூகம்பம், வெள்ளம், புயல், காட்டுத்தீ, சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு அவதியுறும் காலங்களிலும், மின்சாரத் தடை பரவலாக ஏற்படுவதுடன் தகவல் தொழில்நுட்பமும் முற்றிலும் பாதிக்கப்படும்போது மின்சாரம் மற்றும் முதன்மையான தொலைத்தொடர்பு பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலையில், அமெச்சூர் ரேடியோ எனப்படும் `ஹாம் ரேடியோ’ இயக்க உரிமம் பெற்றவர்கள் ஹாம் வானொலி கருவிகள் மூலம் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
hamradio

தமது ஹாம் ரேடியோ நிலையத்தில் மன்றச்செல்வன்.

அத்துடன், பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் நிவாரணங்கள் விரைவில் கிடைக்க வழிசெய்வதிலும் அவர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். 2001 குஜராத் பூகம்பம், 2004 சுனாமி முதல் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பெரும் மழை மற்றும் வெள்ளச் சேத காலங்களில் ஹாம் ரேடியோவை இயக்குபவர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
சுனாமி என்ற வார்த்தையே தமிழகத்தில் பலருக்கு 2004 டிச. 26-ம் தேதிதான் அறிமுகமானது. மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் மற்றும் கடல் சீற்றங்களின்போதுதான் நாம் ஆபத்து கால மேலாண்மை குறித்து சிந்திக்கிறோம்.
இந்நிலையில் கடல்சார் பேரழிவுகளை தடுக்கும் வகையிலும் மீனவர்களுக்கு பல்வேறு செய்திகளை வழங்கும் வகையில் ராமேசுவரத்தில் ஹாம் ரேடியோ நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு வசதி
இதுகுறித்து ராமநாதபுரம் ஹாம் ரேடியோ ஒருங்கிணைப்பாளர் மன்றச்செல்வன் கூறியதாவது: தமிழகத்தில் ஆழ்கடல் மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடிப்புக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் பாதுகாப்புக்கு உயர் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தகவல் தொடர்பு வசதிக்காக அரசே மானிய விலையில் ரேடியோ கருவிகளை வழங்கியுள்ளது. ஆனால் படகுகளில் ரேடியோ கருவிகள் இருந்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியவில்லை. இதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் திசைமாறிச் செல்வதும், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகிறது. மேலும் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுகின்றனர்.
இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மீனவர் களுக்காக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் ஹாம் ரேடியோ நிலை யம் அமைத்து தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யவேண்டும்.
இதன் மூலம் ஹாம் ரேடியோ நிலையத்தில் இருந்தே தமிழகத்தின் 13 கடலோர மாவட்ட மீனவர்களுக்கும் சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற ஆபத்து காலங்களில் மீனவர்கள் செய்ய வேண்டியது என்ன? கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த பல்வேறு விஷயங்களையும் உடனுக்குடன் மீனவர்களுக்கு அளிக்க முடியும்.
மேலும் சர்வதேச கடல் எல்லைகளை மீனவர்கள் தாண்டிப் போனால்கூட மீனவர்கள் கரை திரும்ப வழிகாட்டவும் முடியும் என்றார்.
hindu_tamil

Advertisement

shadow

Leave a Reply