மருத்துவத்தை அடுத்து மாணவர்களை அதிகம் வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான். முன்பு பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இப்போது தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து விட முடியும். ஆனால் எல்லோருக்கும் பொறியியல் படிப்பு பொருந்துமா…?
இடம் கிடைக்கிறது என்பதற்காக எல்லோரும் இந்தப் படிப்பை தேர்வு செய்வது சரியா? சரியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சுயம் இருக்கிறது. தனித்திறன் இருக்கிறது. அந்த திறனை அடையாளம் கண்டு, அதற்கேற்ற துறையைத் தேர்வு செய்வது தான் எதிர்காலத்துக்கு நல்லது.
மருத்துவத்துக்கு உயிரியலும் வேதியியலும் முக்கியம். பொறியியலுக்கு கணிதமும் இயற்பியலும் முக்கியம். குறிப்பாக, எந்த அளவுக்கு கணிதத்தின் மீது ஆர்வமும் புலமையும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் பொறியியலில் சாதிக்கலாம். (அதனால்தான் அண்ணா பல்கலை நடத்தும் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் +2 மதிப்பெண்கள், இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் தலா 50 ஆக இருக்க, கணக்குக்கு மட்டும் 100 ஆக இருக்கிறது) கணிதத்தை பொறியியல் உள்ளிட்ட எல்லா அறிவியலுக்கும் தாய் (Mother of all sciences) என்றும், சுருங்கச் சொல்லும் அறிவியல் (Science of brevity) என்றும் சொல்வதைக் கவனியுங்கள். பொறியியலை `Applied Mathematics’ என்றும், கணிதத்தை `Theoretical Engineering’ என்றும் என் போன்றோர் குறிப்பிடுவோம். ஆய்லர் போன்ற கணித அறிஞர்கள், கணிதத்தோடு மட்டும் நிற்காமல் பொறியியலின் பல துறைகளிலும் வியத்தகு உண்மைகளைக் கண்டறிந்து உதவியதற்குக் காரணம் அவர்களது கணித அணுகுமுறை தான். ஆகவே, கணக்கு எனக்கு பிணக்கு’ என்பவர்கள் பொறியியலுக்கு வணக்கம் சொல்லிவிடலாம்.
அடுத்த கேள்வி, தமிழ்நாட்டில் 600க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 80க்கு மேற்பட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுவதால், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது.
இதற்கு, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ எஞ்சினியரிங்… என்ற அடிப்படைப் பிரிவுகளில் வகைப்படுத்துவது பலன் அளிக்கும். இதே காலவரிசையில்தான் இவை தோன்றின.கீழே சில பிரிவுகளை தொகுத்து தந்திருக்கிறேன். பொறியியலில் உள்ள எல்லாப் பிரிவுகளையும் வைத்துக்கொண்டு குழம்புவதைவிட தமக்கு ஆர்வமுள்ள பிரிவுகளின் தொகுப்பில் மட்டும் கவனம் செலுத்த கீழ்க்கண்ட பட்டியல் உதவும். முக்கியமான, வேலைவாய்ப்பு குறையாத துறைகளில் உள்ள சிறப்புப் பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
Civil:
Civil (Engineering), Geo Informatics, Architecture, Planning, Arch (Interior Design), Transportation.
Mechanical:
Mechanical, Aeronautical, Aerospace, Automobile, Industrial, Mechatronics, Manufacturing, Printing, Design & Manufacturing, Energy, Industrial Engineering & Management, Production, Mining, Material Sc.&Engg, Industrial & Production Engg.
Electrical:
Electrical & Electronics, Instrumentation & Control.
Electronics:
Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Electronics & Instrumentation, Medical Electronics.
Computer Sc:
Computer Sc.& Engg, Computer Sc.& Information Tech, Computer Software, Information Tech, Information Tech & Management, Communication and Computer Engg, Computer Sc & Information Tech.
Bio Sc:
Bio energy, Biotechnology, Industrial Biotechnology, Biomedical, Biomedical Instrumentation, Bioinformation, Pharmaceutical Technology, Pharmaceutical Engg.
Chemical:
Chemical Engg, Chemical Tech, Metallurgical Engg, Metallurgical Engg & Material Sc., Chemical & Electrochemical Engg, Ceramic Tech, Petroleum Engg, Petroleum Tech, Petro refining & Petrochem Tech, Plastic Tech, Rubber& Plastic Tech, Fertilizer and Chemical Tech.
Others:
Food Tech, Leather Tech. Fashion Tech, Apparel Tech, Paper & Pulp Tech, Carpet & Textile Tech, Medical Nanotech.
மேலும் சில விஷயங்களை கேள்வி – பதில் பாணியில் பார்க்கலாம்?
எஞ்சினியரிங் (BE), டெக்னாலஜி (B.Tech) என்று இருவகைகளில் பாடப்பிரிவுகள் இருப்பதும், சில பாடப்பிரிவுகள் இரண்டு வகையிலும் வழங்கப்படுவதும் மேற்கண்ட பட்டியலிலிருந்து தெரியும். அப்படியானால், BE/B.Tech இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?
பொதுவாக BE படிப்பில் அடிப்படைத் தத்துவங்கள் அதிகமாகவும், B.Tech படிப்பில் பயன்பாடுகள் அதிகமாகவும் கற்பிக்கப்படும். அதாவது, முன்னதில் ஆழம் மிகுதியாகவும், பின்னதில் அகலம் அதிகமாகவும் இருக்கும். இதனால், அடிப்படை ஆராய்ச்சிக்கு BE-யும், பயன்பாட்டுக்கு B.Tech-ம் மிகுதியாக உதவும். கணினி அடிப்படையிலான CSE (BE), IT(B.Tech) ஆகிய இரண்டில் முன்னது அதிகமாக விரும்பப்படுவதற்கு இது ஒரு காரணம். ஆனால், இந்த அடிப்படை வேறுபாட்டின்படியே எல்லா BE/B.Tech பிரிவுகளுக்கும் பெயர் இடப்படுவதில்லை. IIT போன்ற Institutes of Technology எனப் பெயர் கொண்ட கல்லூரிகளில் எல்லாப் பிரிவுக்கும் B.Tech பட்டமும் CEG போன்ற College of Engineering எனப் பெயர் கொண்ட கல்லூரிகளில்் BE பட்டமும் முதலில் இவ்வாறே பெயரிடப்பட்டன.
ஆகவே, BE/B.Tech என்ற வேறுபாடுகளை அவ்வளவாக கவனிக்க வேண்டியதில்லை.அண்ணா பல்கலை நடத்தும் கலந்தாய்வுக்கான தகவல் கையேட்டில் சில பாடப்பிரிவுகளின் பெயர்களின் முடிவில் (SS) என இருக்கும். அதன் பொருள் என்ன?
விடை: `Self Supporting’ என்பதன் சுருக்கமே `SS’. அதாவது அந்தப் பாடப்பிரிவு, அரசின் பொருள் உதவி பெறாமல் நடத்தப்படுவது. எனவே அத்தகைய பாடப் பிரிவுக்குக் கட்டணம் கூடுதலாக இருக்கும்.
சில கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் `Accredited’ என்ற தகுதி பெற்றிருக்கும். அதற்கு என்ன பொருள்?
விடை: NBA(National Board of Accreditation) என்ற அரசு அமைப்பில் தரம் ஆராயப்பட்டுத் தரச்சான்று வழங்கப்பட்ட பாடப்பிரிவு என்பது பொருள். இதைத் தேர்வு செய்தாலும் கட்டணம் அதிகம் இருக்கும். தாம் விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவில், SS / Accredited தகுதி பெற்றதும், பெறாததுமான இருவகை இடங்களும் இருந்தால், அத்தகுதிகள் பெறாத இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
சிவில், மெக்கானிக்கல் பிரிவுகள் பெண்களுக்கு ஏற்றவையா?
ஏற்றவையே. தமிழ்நாட்டில் மரைன் எஞ்சினியரிங், மைனிங் எஞ்சினியரிங் பிரிவுகள் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. உடற்கூறு மற்றும் பாதுகாப்பு குறித்தே இந்த வரையறை. மரைன் எஞ்சினியரிங் படிக்க விழையும் ஆண்களுக்கு கூடுதலான கட்டுப்பாடுகளும் உண்டு. வயது (25), எடை (7/45kg), உயரம், மார்பு அளவு, பார்வைத்திறம் ஆகியவை வரம்புக்குள் இருக்க வேண்டும். கப்பலில் சிலகாலம் பாடம் சொல்லித் தரப்படுவதால், கூடுதல் கட்டணமும் உண்டு. மற்றபடி இது பலராலும் விரும்பப்படுவது. பிறர் செலவில் (சம்பளத்தில்) ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக ஏற்றது. கணிசமாகவும் வரியில்லாமலும் சம்பாதிக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் தரை மட்டத்திற்குக் கீழ் சுரங்கங்களில் பணியாற்றக் கூடாது எனச் சுரங்க அமைச்சகத்தின் விதி இருப்பதால் பெண்களுக்குச் சுரங்கவியலில் (தமிழ்நாட்டில்) இடம் மறுக்கப்படுகிறது. மற்றபடி சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் எல்லாம் விதிவிலக்குகள் இல்லை. தாராளமாகப் படிக்கலாம்.
புதிய, அதிக வேலைவாய்ப்புகள் கொண்ட பாடப்பிரிவுகள் எவை?
கெமிக்கல் மற்றும் மெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங், உணவுத் தொழில்நுட்பம், ஃபார்மாசூட்டிகல் டெக்னாலஜி, பெட்ரோலியம் ரீஃபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியல், ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பம் ஆகியவை அண்மையில் தோன்றியுள்ள சில கவனத்தை ஈர்க்கும் பாடப்பிரிவுகள். பெட்ரோலியம் சார்ந்த படிப்புகளுக்கு அரபு நாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.
பேராசிரியர் ப.வே.நவநீதகிருஷ்ணன்
முன்னாள் இயக்குநர், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு
-நன்றி தமிழ் கல்வி
Leave a Reply
You must be logged in to post a comment.