shadow

வலிகளைத் தாங்கு……

சின்ன வயதிலிருந்தே வலிகளைத் தாங்கும் பக்குவத்தை சிறிய பயிற்சிகளின் மூலம் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல நேரம் தண்ணீர் குடிக்காமல் தாகத்துடன் இருக்கப் பழக வேண்டும்.
தேவையானவை உடனே கிடைத்து விட்டால் வாழ்க்கையின் அருமை நமக்கு புரியாமலே போய் விடுகிறது.
சில வேளைகள் பட்டினி இருக்க வேண்டும்,பசியை நாம் உணர வேண்டும், அது ஒரு விதமான மனப்பயிற்சி.
நிறைய தூரம் நடந்து போக வேண்டும்.எடிசன் ஒரு முறை வயிறு வலித்ததால் காரை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு நடந்தே சென்றாராம். ஆனால் வயிற்றுவலி சரியாகவில்லை. நண்பர்களிடம் சொன்னாராம், ‘நடந்தால் வயிற்றுவலி குணமாகாது என்று கற்றுக் கொண்டேன்’.
குளிர்காலத்தில் அதிக கதகதப்பான உடைகள் அணியாமல் தூங்குவது, வெயில் காலத்தில் மின்விசிறி கூட இல்லாமல் வியர்க்கப் பழகிக் கொள்வது போன்றவற்றின் மூலம் உடலைப் பக்குவப் படுத்த வேண்டும்.
‘எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும் பரவாயில்லை, பணியை முடிப்பேன்’ என்று வைராக்கியத்துடன் காத்திருப்பது,ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்கிற நேரத்தை அதிகப்படுத்துவது, குறைபாடுகளை உரிய முயற்சியின் மூலம் வென்றெடுப்பது என்று மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நம்மை பலப்படுத்திக் கொள்ள வலிகள் தேவை.
பெண், வலியைப் பொறுத்துக் கொள்ள மறுத்திருந்தால் மனித இனமே உருவாகியிருக்காது என்பதை உணர வேண்டும்.
சொகுசான வாழ்க்கையும், பாதுகாப்பான ஏற்பாடுகளும் நம்மை நன்றாக வளர்ப்பதாக எண்ணச் செய்யுமே தவிர அவை உண்மையல்ல. போராட்டங்களைச் சந்தித்து நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள மனமும், உடலும் பயிற்சி பெற்றால் தான் சரியான வளர்ப்பு முறை உருவாகும்.
யாருடைய சுண்டு விரலையோ பிடித்துக் கொண்டு எப்போதும் பயணித்து விடலாம் என்று நினைப்பவன் திடீரென இருட்டறையில் கண்ணைக் கட்டி விட்டதைப் போல அவதிக்குள்ளாவான்.
காயப்பட்டால் இயற்கையாகக் குணமாவதற்கு அனுமதிக்க வேண்டும். சின்னக் காய்ச்சலுக்கும் உடனடியாக மாத்திரைகளை உண்டு சரிப்படுத்திக் கொண்டு எதிர்ப்பு சக்தியை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.
உடலில் பெறுகிற அடிகளையும், மனத்தில் விழுகிற அடிகளையும் சலனப்படாமல் தாங்கிக் கொள்வது தான் உணர்ச்சி மேலாண்மை. அவர்களே சின்னச் சின்னப் போர்களில் தோற்றாலும் மகத்தான போரில் மாபெரும் வெற்றிகளை ஈட்டுகிறார்கள்.

தகவல் தொகுப்பு – முத்து லெட்சுமி.   Reporter –  tamilnadumandram.com

Advertisement

shadow

Leave a Reply