shadow

குற்றச்சாட்டு வனைவதற்குக்கூடப் போதுமான ஆவணங்களை முன்னுக்குப்பின் முரணின்றி தாக்கல் செய்யமுடியாத அளவிற்குத் தரம்தாழ்ந்துபோய்விட்டது மத்தியக் குற்றப் புலனாய்வுக்கழகம் (சிபிஐ) என்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீதான 2ஜி வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தின்கீழ் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் தாக்கல் செய்த லஞ்ச ஊழல் வழக்குகளில் பத்து சதவீத அளவிற்குக் கூட  அதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு, தண்டனை பெற்றுத்தர வக்கில்லாமல் போய்விட்டது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் வழக்குகளை விசாரிக்கையில் அவர்கள்மீது குற்றச்சாட்டு வனைவதற்குக்கூட முன்னுக்குப்பின் முரணில்லாமல் ஆவணங்களைத் தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தால் முடியாமல் போய்விட்டது என்று வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி சிபிஐ மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் ஏன் இப்படி உருத்திரிந்து போய்விட்டது என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தயாநிதி மாறன் மத்திய டெலிகாம் அமைச்சராக இருந்த சமயத்தில், தயாநிதி இல்லத்திலிருந்த ஐஎஸ்டிஎன்-உடன் பயன்படுத்தப்படும் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகள் பின்னர் அவரது குடும்பத்தாருக்குச் சொந்தமான சன் டிவி தொலைக்காட்சி அலைவரிசைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சன் குழுமத்தின் தலைவராக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் இருந்துவருகிறார்.  வழக்கில் இவ்விருவருமே குற்றஞ்சாட்டப் பட்டிருந்தார்கள்.

‘ஐஎஸ்டிஎன் இணைப்புகள்’ என்பவை மிகவும் உயர்ரக தரவுச் சேவைகளைச் செய்யக்கூடிய இணைப்புகளாகும். இவை வீடியோ மாநாடுகள் நடத்துவதற்கு வணிக நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடியவைகளாகும். மேலும் இவற்றுடன் வீடியோ மற்றும் எழுத்துக்களை மிக விரைவாக அனுப்புவதற்கும் ஊடகங்கள் பயன்படுத்தி வருவதாகும்.

இவை அனைத்தும் 2007இல் தயாநிதி மாறன் மத்திய டெலிகாம் அமைச்சராக இருந்தபோது நடைபெற்றவை. அந்த சமயத்தில் 4ஜி வலைப்பின்னல் கிடையாது. பொது இணைய சேவை என்பதும்  அதீத செலவு பிடிக்கக்கூடியதாக இருந்தது. அப்படியே  அவற்றைப் பெற்றிருந்தாலும் இப்போதுள்ள அளவிற்குத் தரமானவைகளாகவும் இருக்காது. அப்போது சந்தையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் என்னும் இரு பொதுத்துறை நிறுவனங்களும்தான் கொடிகட்டிப் பறந்தன. பிராட்பாண்ட் சந்தையில் இவற்றின் வணிகம் என்பது 95 சதவீதத்திற்கும் அதிகமாகும். ஐஎஸ்டிஎன் மூலமாக தரவுகளைப் பதிவிறக்கம் செய்வது அப்போது அதீத செலவுபிடிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.  இத்தகைய பின்னணியில், 323 ஐஎஸ்டின் இணைப்புகளை தயாநிதி மாறனின் போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் 2007 ஜனவரியிலிருந்து மே மாதம் வரை நிறுவியிருந்தார்கள். மற்றும் 400க்கும் மேலான இணைப்புகளை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிறுவியிருந்தார்கள்.

இதில் மிகவும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையையும் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் இவை தொடர்பான பதிவேடுகள் எதையும் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதாகும்.

இவ்வாறு 323 + 400 இணைப்புகள் தயாநிதி மாறனின் வீடுகளுக்கு நிறுவப்பட்டிருந்த போதிலும் அவற்றின்மூலமாக அவரது சகோதரருக்குச் சொந்தமான சன் டிவி தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு கேபிள்கள் வழியாகப்  அவை பயன்படுத்திக்கொள்ளப்பட்ட போதிலும் இவற்றை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில் எவ்விதமான ஆவணங்களையும் மத்தியக் குற்றப் புலனாய்வுக்கழகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திடவில்லை. இவ்வாறு ஆவணங்களை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் டெலிகாம் செயலாளருக்கு 2007இல் சமர்ப்பித்திருக்கிறது. அவை அதிகாரபூர்வமாக அலுவலகத்தில் இருக்கின்றன.  ஆனால் அவற்றை  அது நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திடவில்லை. ஏன் அது அவ்வாறு நீதிமன்றத்தில் அவற்றைத் தாக்கல் செய்திடவில்லை என்பது தெளிவாகவில்லை.

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி, அவர்களுக்கு எதிரான குற்றங்களை நிறுவிடும் விதத்தில் போதுமான ஆதாரங்களை மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்களிருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் அவர்கள்மீது குற்றச்சாட்டு வனையாமலேயே அவர்களை விட்டுவிட்டார் (discharged). (நீதிமன்ற நடைமுறையின்படி ஒருவர்மீது குற்றச்சாட்டு வனைந்து, சாட்சிகள் மற்றும் சான்றாவணங்களைப் பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர்களை விடுதலை செய்வதாக (acquit செய்து) தீர்ப்பு வழங்குவார்கள். குற்றச்சாட்டே வனையமுடியவில்லை என்றால் விட்டுவிடுவார்கள் (அதாவது discharge செய்துவிடுவார்கள்.) இந்த வழக்கில் நீதிபதி அவ்வாறு இவர்களை விட்டுவிட்டார்.

இந்த வழக்கில் மேலும் பல விவரங்களை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். நீதிமன்றத்தின்முன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இணைப்புகள் அடங்கிய குறுந்தகடுகளை ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதற்கு மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் முறையான பதிலை நீதிமன்றத்திற்கு அளித்திடவில்லை என்று சிறப்பு நீதிபதி கண்டித்திருக்கிறார்.  டெலிபோன் இணைப்புகள் பிஎஸ்என்எல் அமைப்பு மூலமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றால் பின்னர் எப்படி அழைப்புப் பதிவேடுகளை சிபிஐ பெற்றது என்பதற்கான விவரங்களும் தெளிவாக இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

உச்சநீதிமன்றம், மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா எப்படித் தன் இல்லத்திற்கு ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஊழல்களில் சம்பந்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அனுமதித்தார் என்பது குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்று கட்டளையிட்டபோதே, மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் மீதிருந்த நம்பகத்தன்மை சரியத் தொடங்கிவிட்டது. இவ்வாறு ரஞ்சித் சின்கா மீது விசாரணை நடத்திட உச்சநீதிமன்றம் கட்டளைபிறப்பித்தது மோடியின் ஆட்சிக்காலத்தில்தான். ஆனால் அந்த விசாரணையின் கதி என்னாயிற்று என்று இதுவரையிலும் தெரியவில்லை.

அதேசமயத்தில், வரலாற்றில் முதன்முறையாக, உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த கட்டளையைத் தொடர்ந்து, மத்தியப் புலனாய்வுக் கழகம் தன் சொந்த புலன்விசாரணையையும் அது தாக்கல் செய்திருந்த குற்ற அறிக்கையையும் பின்னர் மறுதலித்த கூத்தையும் இப்போதுதான் நம்மால் பார்க்க முடிந்தது. ஆம், குஜராத்தில் சொராபுதீன், அவர் மனைவி கவுசர் பீவி மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியவர்கள் போலி என்கவுண்டர்கள் மூலமாகக் கொல்லப்பட்ட வழக்கை  ஆரம்பத்தில் சிபிஐ பதிவு செய்திருந்தது. இதில் பாஜகவின் தலைவரான அமித் ஷாவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பிரதானமானவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்னர் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். (discharged). பின்னர் இவ்வழக்கில் பிணைக்கப்பட்டிருந்த பல காவல்துறை அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். ஏனெனில் இவ்வழக்கின் 55 சாட்சிகளில் 28 சாட்சிகளுக்கு சிபிஐ போதிய பாதுகாப்பு அளித்து நீதிமன்றத்திற்கு அழைத்துவராததால் அவர்கள் நீதிமன்றங்களில் சாட்சியம்  அளிக்கையில் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்டார்கள்.   இந்த வழக்கை உச்சநீதிமன்றமே நேரடியாகக் கண்காணித்து வந்த நிலையிலும்கூட இது நடந்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில், மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்திற்கு முன்பிருந்த நல்லபெயர் இப்போது இல்லை. அது, கந்தல் கந்தலாகிக் கொண்டிருப்பது நன்கு தெரிகிறது. ஏனெனில் அது நீதிமன்றங்களில் தாக்கல் செய்திடும் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தருவதில் மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துகொண்டிருக்கிறது. பத்து சதவீதத்தினருக்குக்கூட அதனால் தண்டனைபெற்றுத்தர முடியவில்லை.

(நன்றி: தி ஒயர் இணைய இதழ்)

(தமிழில்: ச.வீரமணி)

—————————————————————————————நன்றி – தீக்கதிர்————————————————————————————————————-

Advertisement

shadow

Leave a Reply