shadow

சென்னை, ஏப்.20 பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா இணைந்து நடத்திவரும் சென்னை புத்தகச் சங்கமத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் வாசகர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். விடு முறைநாள் என்பதால் அலுவலகங்களில் பணியாற்று பவர்கள் சென்னை புத்தகச் சங்கமத்துக்கு குடும்பத்துடன் வருகைதந்தனர்.

நேற்று (19.4.2015) ஏழாம் நாள் நிகழ்வில் இலக்கியத் தென்றல் பழ.கருப்பையா சிறப்புரை ஆற்றினார். விழிகள் வேணுகோபால் தலைமையில் பழ.கருப்பையா குறித்த அறிமுக உரையை பிராட்லா வழங்கினார்.

பழ.கருப்பய்யா உரை

பழ.கருப்பையாவின் உரையில், அதிகார மாற்றங்களால், பெரியாரின் தேவை இன்று அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நான்தான் திராவிடன் என்று நவில்கையில் என்கிற தலைப்பில் பேசும்போது குறிப்பிட்டதாவது:

நான்தான் திராவிடன் என்கிற இந்தத் தலைப்பு பாரதிதாசன் பாட்டினுடைய ஒரு வரி. இந்தத் தலைப்பு இந்தக் காலத்துக்குத் தேவையானது என்று நான் கருதுகின்றேன்.

நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ்
எனத் திராவிடச் சார்போடும் ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி.

நான்ஓர் திராவிடன் நனி மகிழ் வுடையேன்
என்று பாரதிதாசன் கூறுவார்.

திராவிட இயக்கம் மிகுந்த எழுச்சி பெற்ற காலத்தில் திராவிடத்தின் போர் முரசமாக ஒலித்தவர் பாரதிதாசன். காரைக்குடியில் என்.ஆர்.சாமி திராவிட இயக்கத்தைக் கட்டிக்காத்தவர். அவர் மகன்கள் திராவிடமணி, சமதர்மம் அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக பிராட்லா, பிரின்சும் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கிறார்கள்.

பொதுவாக வாரிசு இருப்பது அரசியலில் இழிவாக உள்ளது. அரசியலில் வாரிசுகளை தவிர்க்க இயலாமல் ஏற்றுக்கொண்டு வருகிறோம். ஆனால், தொண்டு இயக்கத்தில் பயன்கருதாத அந்தக் கொள்கையில் வழிவழியாக அதே கொள்கையில் இருந்து மாறாமல், சமுதாயத் தொண்டினை தவறாமல் பின்பற்றி வருகிறார்கள் என்பது பெருமைக்குரியது.

பெரியாரை சந்தித்தேன்

நான் பெரியாரைப் பார்த்திருக்கிறேன். அவரோடு நான் உரையாடி இருக்கிறேன். அவரிடம் கையெ ழுத்துகூட பெற்றிருக்கிறேன். பெரியாரிடம் கையெழுத்து வாங்கும்போது  காலணா கொடுக்க வேண்டும். நான் பெரியாரிடம் ஒரு அணாவுக்கு புத்தகம் வாங்கி உள்ளேன் என்று கையெழுத்து வாங்கினேன். அதற்கு காசு கிடையாது.

அய்கோர்ட்டில் பார்ப்பன நீதிப்போக்கு என்று புத்தகம் எழுதுவார். அஞ்சாதவர் பெரியார். பெரியார் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார். கதர்மூட்டையை ஊர்ஊராகச் சென்று விற்றார். கள்ளுக்கடை மறியலில் பங்குகொண்டு தன்வீட்டிலி ருக்கின்ற 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

அந்த அளவுக்கு தேசிய இயக்கத்தில் ஊறிப்போன அவர் அதற்கு நேர்மாறாக இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காகவும், பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தேவை ஏற்பட்டது என்பதால் தேசிய இயக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார்.

இங்குள்ள மக்கள் எல்லாம் சூத்திரர்களாக, அடி மைகளாக இருக்கிறார்கள். தங்களுடைய மரியாதையை தெரியாமல் இருக்கிறார்கள். இந்த ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனத்திலிருந்து தமிழனை மீட்கும்வரை சுதந்திரம் காத்திருக்கலாம் என்று சொன்னார்.

எப்படி அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களை, அவர்களை மேல்நிலைக்கு கொண்டுவருவதுதான் விடுதலைப் போராட்டத்தைவிட முக்கியமானது என்றாரோ, அதுபோல் பெரியார் தமிழன் எழுச்சி பெறுவதற்காகப் பாடுபட்டார்.

தன் வாழ்நாளில்
வெற்றி கண்டவர் பெரியார்

எடுத்துக்கொண்ட கொள்கையை தனது வாழ் நாளில் வெற்றி பெற்றதைப் பார்த்த ஒரே தலைவர் பெரியார்தான்.

கண்ணதாசன் சொல்லுவார், நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார் பெரியார் என்று. இன்றைக்கு எல்லாமும் நீதிமன்றம்தான். தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதி என்றாலும், நீதிமன்றம்தான்; அதற்கு மறுப்பு என்றாலும் நீதிமன்றம்தான். காரணம் அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து வருவதுதான்.page05-08.pmd

இவற்றையெல்லாம் தீர்மானிக்கின்ற களமாக நீதிமன்றம்தான் இருக்கிறது. ஆட்சி அதிகாரங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். நீதிமன்றம் தன் அடிக்கு கூடுதலாக முடிவுகளை எடுக்கிறது.

பெரியார் கொள்கைதான் வெற்றி பெற்று விட்டதே, சூத்திரனாக இருந்த தமிழன் உணர்வு பெற்றானே, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வைப் பெற்று விட்டார்களே அந்த இயக்கத்தின் பணி முடிந்து விட்டது.  இனிமேல் அந்த இயக்கம் இருப்பதில் தேவைக்குமேலான பணிதான் செய்ய வேண்டி யிருக்கும் என்றுதான் நான் கருதினேன்.

ஆனால், பல சமயங்களில் அதிகார மய்யங்கள் மாறுவதன்மூலம் அந்த இயக்கத்துக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது என்பதை உணர் கிறேன்.

பெரியாரின் போராட்டங்கள்

தாலி அகற்றம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் தந்தை பெரியார் நடத்தவில்லையா?  ராமர் படத்தை செருப்பால் அடிக்கவில்லையா? ராஜாஜி முதல்வராக இருந்தபோதுதான் பெரியார் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தை நடத்தினார். அந்தப் போராட்டம் குறித்து ராஜாஜி மூச்சு விடமாட்டேன் என்றார். சமயத்தவர்கள், மனம் நோவார்கள் என்று கூறவில்லை. ராஜாஜி மனம் நோவதாகச் சொல்லவில்லை.page05-08.pmd

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், சாணிக்கு பொட்டிட்டு சாமியென்பார் செயலுக்கு,
நாணி நீ கண்ணுறங்கு, நகைத்து நீ கண்ணுறங்கு
என்று கூறினார்.

பெரியாரின் தேவையினால்தான் சூத்திரனிலிருந்து விடுவிப்பு உணர்வு ஏற்பட்டது.
நம்பிக்கை என்றாலே உண்மையின் மறுதலிப்பு தான்.

காவடி, யாகம், பூசை, வேல், தீக்குழி இறங்கி நடப்பது என்று என்னென்னவோ செய்கிறார்கள். நான் அவ்வளவு மூடநம்பிக்கைக்காரன் அல்ல!

கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார் மிகவும் நேர்மையானவராக இருந்தார். பண்டித ஜவகர்லால் நேரு நேர்மையாக இருந்தார். கடவுள் நம்பிக்கை யோடு பிழை செய்யக்கூடாது. பெரியார் கூறினாரே, கடவுள் வந்துவிட்டால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டதற்கு,  இருக்கிறார் என்று சொல்லிவிட்டால் போச்சு என்றாரே.

கடவுள் இல்லை என்கிற கருத்து பெரியார் சிலை வைத்த காலத்திலிருந்து அதன் பீடத்தில் இருந்து வருகிறது.  சிறீரங்கம் கோயிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலையிலும் அந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.

இப்போது கருத்து சொல்லப்படுவதே குற்றம் என்கிற காலமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் மனம் புண்படுகிறது என்று நீதிமன்றம் செல்லும் நிலை இன்று உள்ளது. அப்படியே வாழ்நாளை நீதிமன்றத்திலேயே கழிக்க வேண்டியதுதான்.

_இவ்வாறு பழ.கருப்பய்யா சிறப்புரையில்  குறிப்பிட்டார்.

Advertisement

shadow

Leave a Reply