shadow

‘நீங்கள் பள்ளியில் சேர்க்க கஷ்டப்பட வேண்டாம் உங்களிடமுள்ள ரூ. 1 கோடிக்கு மேல் உள்ள அசையாத சொதுக்களை பள்ளியின் பெயரில் மாற்றினால் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி உறுதி’

‘சொத்து பத்திரம் தேவை இல்லை, *A * பள்ளியில் உங்கள் குழந்தை படிக்கிறது என்ற ஒப்புதல் கடிதம் போதும்… ரூ. 2 லட்சம் குறைந்த வட்டிக்கு பணம் வழங்கப்படும்’

‘பிரபல பள்ளியில் இடம் வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் வீதம் 50 பேரிடம் சுமார் 2 கோடிகள் வரை ஏமாற்றிய, பிரபல கோடீஸ்வர மோசடி மன்னன் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், சைதாபேட்டையில் சமோசா சாப்பிடும்போது பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு’ – ஒரு தினசரி செய்தித்தாள்

எதிர்காலத்தில் இப்படி விளம்பரங்களும், செய்திகளும் வந்தாலும் ஆச்சர்யபடத் தேவை இல்லை

குழந்தைகளை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு சேர்த்த பெற்றோர் முதலாம் உலகப்போர் முடிந்த அமைதியிலும், ஆறாம் வகுப்பு சேர்த்த பெற்றோர் இரண்டாம் உலகப்போர் முடிந்த மகிழ்ச்சியிலும் பணத்தை பலி கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்கி விட்டனர் என்றால் மிகையாகாது. ஒரு காலத்தில் எதுவெல்லாம் இலவசமாக வழங்கப்பட்டனவோ அவை எல்லாம் இன்று விலை கொடுத்து ,கடன் பட்டு அடைய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். தானமாக கருதப்பட்ட கல்வி, உணவு, நீர் ,வேத பாராயணம் போன்றவைகள் இன்று பல கோடிகள் புழங்கும் தொழிலாக மாறி விட்டது.

ஒரு பக்கம் டாஸ்மாக்கை கொடுத்து உடலை அழிக்கும் அரசு, மறு புறம் கல்வி நிலையங்களை கண்டு கொள்ளாமல் நம்மை ஏழையாக்கி வருகின்றன. மருத்துவமனைகள் நம் உறவுகளின் பாசத்தின் வலிமை அறிந்து பணத்தை பிடுங்கி உறவுகளுக்கு உயிர் கொடுக்கிறது. கல்வி நிலையங்கள் நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்ற பயத்தை காண்பித்து பல லட்சம் கறந்து விடுகிறது.

துப்பாக்கி, கத்தி முனையில் கொள்ளை என்பதெல்லாம் பழைய டெக்னிக். வானளாவிய கட்டடங்களை காண்பித்து கல்வி வேண்டுமா? காசு கொண்டு வாருங்கள் என்பதுதான் இன்று நவீன கொள்ளை.

கள்ளச் சாராயம், கந்து வட்டி தொழில் நடத்தியவர்கள், பல சரக்கு கடை நடத்தியவர்கள் எல்லாம் கல்வித் தந்தை, கல்விக் கொடை வள்ளல்களாக வலம் வருகின்றனர். நம் குழந்தைகள் படித்து பணக்காரனாக வர வேண்டும் என்று நினைப்பில் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் பிள்ளையின் கல்விச்செலவால் ஏழையாகி, வாழ்வு முழுவதும் கடனாளியாகவே வாழ்வது பள்ளிக் கல்வியின் ‘சாதனை’.

திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கும்போதே, பெறாத குழந்தைக்கு பள்ளிக்கல்விக்கு அட்வான்ஸ் தொகை கட்டினால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டனர்.

பள்ளிகளுக்காக பெற்ற தாய், தந்தையை மறந்து, கிராமத்து கலாச்சாரம், விவசாயம் மறந்து நகருக்கு குடி வந்தவர்கள் மனதளவில் பட்ட கஷ்டம் மிக அதிகம். ஒரு ரூபாய் கொடுக்காத அரசுப் பேருந்து நடத்துனரிடம் சண்டை போடும் நம் மக்கள், 2 கிலோமீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு மாதத்திற்கு ரூ.1500 கொடுப்பது பள்ளியால் பலியாகும் நம் வீரத்திற்கு எடுத்துக்காட்டு.

நன்கொடை, பருவக் கட்டணம், பேருந்து கட்டணம், புத்தகம் மற்றும் சீருடைக் கட்டணம் ( வெளியில் தைத்தால் உடம்பில் நிற்காதா?), ஆண்டு விழா கொண்டாட்ட கட்டணம் (இவர்கள் பள்ளி நடத்துவது ஊருக்கே தெரிய வேண்டுமாம்) என்று நம்மை ஏழையாக்கும் ஏராளமான திட்டங்களை பள்ளிகள் வைத்திருக்கின்றன. காலுக்கு போடும் ஷூ கூட இவர்கள் மொத்த விலைக்கு வாங்கி மாணவர்களிடம் விற்று வருகிறார்கள். அதிலும் ஆண்டு விழாவிற்கு குழந்தைகள் போட்டு வரும் அரை மணி நேர உடைக்கென ரூ. இரண்டாயிரம் வாங்கி, அன்றுடன் அந்த வருடத்திற்கான “மொய் கணக்கு” முடிக்கப்படும்.

தனியார் பள்ளிகள் 10,12 ஆம் வகுப்பிற்கு 9,11 ஆம் வகுப்பில் இருந்தே பாடம் நடத்துவதாக மக்கள் கருத்து உள்ளது. 11 ஆம் வகுப்பு கோடை விடுமுறையில் கூட 12 ஆம் வகுப்பிற்கு தயார் செய்வதாகவும் மக்கள் கருத்தாக உள்ளதை அரசு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால், உண்மையான தேர்ச்சி தெரிந்து விடும். அரசுப்பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டால் தனியார் பள்ளிகளின் பண வெறி அடங்கும். கழிப்பறை பார்க்காத மாணவர்களும், தரமான தண்ணீர் கொடுக்காத பள்ளிகளும் பெற்றோரை பயமுறுத்தி தனியாருக்கு பணத்தை தாரை வார்க்க வைக்கின்றது.

அரசு அதிகாரிகள் தனியார் பண முதலைகளை வளர்க்க அரசுப் பள்ளியின் தரத்தை மேம்படுத்தாமல் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளது. எப்படி தனியார் பேருந்து, அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல, அரசு பேருந்து மெதுவாகச் சென்று அடுத்த முறை அரசுப் பேருந்தை மறக்க வைக்குமோ, அது போல அரசுப்பள்ளியின் தரத்தை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பது பொதுவான கருத்து.

அடிப்படை வசதிகளான தடை இல்லா மின்சாரம், மின் விசிறி, குடி நீர்,கழிப்பறை, சுத்தமான சுற்றுப்புறம், சுகாதாரமான பள்ளிக்கூடம் இவை எல்லாம் அரசு செய்து கொடுத்தால் மக்கள் ஏன் தனியார் பள்ளிக்கு சென்று ‘பணத்தை பலி’ கொடுக்கும் நிலைக்கு ஆளாக வேண்டும்?

அரசு பள்ளி ஆசிரியர்களை மேம்படுத்தியும், தரமற்ற ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பி திறமையான ஆசிரியர்களை நியமிப்பதும் வருங்கால அரசு பள்ளியின் ஆயுளுக்கு நல்லது.

மக்கள் தனியார் பள்ளிக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்க காரணம், அரசு பள்ளிகளின் சுகாதார மின்மை, தரமற்ற கழிப்பறை வசதி, அலட்சியமான ஆசிரியர்கள், பேருந்து வசதி, நவீன கல்வி போதனைக் கருவிகள் இல்லாமையே என்றால் மிகையாகாது. அரசு பள்ளிகளின் சுகாதாரம், கழிப்பறை வசதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்.

அரசு பள்ளியில் இலவச கல்வி கிடைக்கின்றதோ இல்லையோ இலவசமாக நோய் கிடைக்கும் என்ற அச்சத்தில், பலரும் லட்சக்கணக்கான தொகையை தனியார் பள்ளிகளிடம் கொட்டிக் கொடுக்கின்றனர். இனி வரும் காலங்களில் சுகாதார மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதும், ஆங்கிலப்புலமைக்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியம். அரசுப்பள்ளிகள் 5 ஆம் வகுப்பு முதலே மாணவர்களை தனியார் பள்ளிகள்போல ஆங்கிலப் பயிற்சி, சீருடை போன்றவற்றில் கவனம் செலுத்தினாலே போதும் 10,12 தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மொத்த மதிப்பெண்ணில் 90 %, 95% மதிப்பெண் வாங்குவோருக்கு ரூ. 25,000, ரூ.40,000 பரிசு என அரசு அறிவிக்க வேண்டும். மேலும் அரசு ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட பாடத் தில் மாணவர்கள் 100 % மதிப்பெண் எடுத்தால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை ரூ. 2000 வழங்கி மாணவர்கள், ஆசிரியர்களின் செயல் திறனை மேம்படுத்த வேண்டியது அரசு அரசுப்பளியின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையாகவும், தனியார் மோகத்தில் இருந்து விடுபடும் வாய்ப்பாகவும் இருக்கும்.

அரசு அரசுப் பள்ளிகள் தரம் மேம்பட (ஷேர்) பங்குகளை வெளியிட்டு கல்வி வளாகத்தின் தரத்தை மேம் படுத்தலாம் அல்லது ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகைக்கு பள்ளிகள் பராமரிப்பு செய்ய தனியாரிடம் ஒப்பந்தம் செய்தால், மாணவர்கள் எண்ணிக்கை கட்டாயம் கூடும். இதனால் தனியார் பள்ளிகள் கட்டணக் குறைப்பிற்கு வழிவகை செய்யும்.

நம்மை ஏமாளிகளாக நினைக்கும் தனியார் கல்வி நிலையத்தின் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க கற்பிக்கும் தரம், சுற்றுச் சூழலை உயர்த்த வேண்டியது அரசின் கையில் தான் உள்ளது.

- எஸ்.அசோக் (நன்றி: விகடன்)

Advertisement

shadow

Leave a Reply