shadow

இந்தியாவில் உள்ள நிலைமையைக் கண்டு மிகவும் வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம், கடுங்கோபப்படுகிறோம் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் பிரதமர் நரேந்திரமோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் வருமாறு:

மக்களால் அளிக்கப்பட்ட அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது என்பதையே கத்துவா மற்றும் உன்னாவோ பயங்கர நிகழ்வுகள் காட்டுகின்றன.

இந்துக்கள் என்ற பெயரால் ஒருவர் மற்றொருவரிடம் மிகக் கொடூரமானமுறையில் நடந்துகொண்டிருப்பதானது, நாம் மனிதர்களாக இருப்பதற்கே அருகதையற்றவர்கள் என்று காட்டியிருக்கிறது.

பிரதமர் அவர்களே, இக்கடிதத்தை நாங்கள் உங்களுக்கு எழுதுவதற்குக் காரணம், இச்செயல்களைக் கண்டு நாங்கள் வெட்கித் தலைகுனிகிறோம், வேதனைப்படுகிறோம், புலம்புகிறோம் என்று உங்களுக்குத் தெரிவிப்பதற்காக மட்டுமல்ல, இச்செயல்களைக் கண்டு கடுங்கோபம் கொண்டிருக்கிறோம் என்று காட்டுவதற்காகவும்தான் எழுதி இருக்கிறோம். மக்களிடையே மத ரீதியாக வெறுப்பை உமிழும் உங்கள் கட்சி மற்றும்  அதன் கணக்கிலடங்கா பிரிவுகளின் நிகழ்ச்சிநிரல்கள் கண்டு கடுங் கோபம் கொண்டிருக்கிறோம். இவை நம் நாட்டின் அரசியலில், நம் சமூக மற்றும் கலாச்சாரத்தில், ஏன், நாளும் நடைபெறும் நம்முடைய  நடைமுறை வாழ்க்கையில் மோசமான முறையில் மெல்ல மெல்ல பிற மதத்தினர் மத்தியில் வெறுப்பை உமிழும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. அத்தகைய உங்கள் நிகழ்ச்சிநிரல்தான் கத்துவா மற்றும் உன்னாவோ நிகழ்வுகளுக்கு சமூக அங்கீகாரத்தையும், சட்டபூர்வ அங்கீகாரத்தையும் அளித்திருக்கின்றன. ‘

ஜம்முவில் உள்ள கத்துவாவில், சங் பரிவாரத்தால் நாளும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வன்தாக்குதல் கலாச்சார நடவடிக்கைகளால் வெறியேற்றப்பட்டுள்ள மதவெறியர்களுக்குத் தங்களுடைய வக்கிரத்தனமான நிகழ்ச்சிநிரலை அரங்கேற்றுவதற்குத் துணிவைத் தந்துள்ளது. தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயலானது தங்கள் கட்சியில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் சரி என்று அங்கீகரிப்பார்கள் என்பதும் அதன்மூலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கம் இடையேயான இடைவெளியை அதிகரித்திட முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

உன்னாவோ நிலைமை என்ன? ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது மட்டுமல்ல, மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும். வன்புணர்வுக்குற்றங்களைச் செய்திட்ட கயவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, வன்புணர்வுக்கு ஆளானவரையும் அவர்தம் குடும்பத்தாரையுமே மாநில அரசாங்கம் வேட்டையாடியது என்பது எந்த அளவிற்கு வக்கிரத்தனத்துடன் அந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதையே காட்டுகிறது. உயர்நீதிமன்றம் கட்டளையிட்ட பின்னர்தான் உத்தரப்பிரதேச அரசாங்கம் கடைசியில் செயல்படத்தொடங்கியது என்பது எந்த அளவிற்கு அது உயர்நீதிமன்றத்தின் கட்டளையை அரைமனதுடனும் கபடத்துடனும் மேற்கொண்டது என்பதைக் காட்டுகிறது.

பிரதமர் அவர்களே, இரண்டு வழக்குகளிலும், குற்றமிழைத்துள்ள கயவர்கள், அதிகாரத்தில் உள்ள உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். கட்சிக்குள் எல்லோருக்கும் மேலானவராக நீங்கள் இருப்பதாலும், கட்சியின் மீதான அனைத்து அதிகாரங்களும் உங்களுக்கும் உங்கள் கட்சித் தலைவருக்கும் இருப்பதாலும், இத்தகைய கொடூரமான நிகழ்வுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டியவராவீர்கள். எனினும் நீங்கள், அவ்வாறு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அவற்றைச் சரி செய்வதற்குப் பதிலாக, நேற்றுவரை நீங்கள் இத்தகைய இழிசெயல்கள் குறித்து எதுவுமே கூறாது மவுனமாக இருந்தீர்கள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மக்கள் கொதித்தெழுந்தபின்னர், இனியும் இந்த இழிசெயல்கள் குறித்து கண்டும் காணாதது போல் இருந்துவிட முடியாது என்று நன்கு தெரிந்தபின்னர்தான் நீங்கள் உங்கள் மவுனத்தைக் கலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்போதும்கூட, இந்த செயல்களைக் கண்டிப்பதாகவும், வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அதே சமயத்தில், இச்செயலுக்குப்பின்னே மறைந்துள்ள மதவெறிக் குணத்தைக் கண்டிக்க வில்லை. அதேபோன்று, இத்தகைய ஒரு பிரிவினருக்கு எதிராக வெறுப்பை உமிழும் சமூக, அரசியல் மற்றும் நிர்வாக நிலைமைகளில் மாற்றம் கொண்டுவருவோம் என்றும் கூற முன்வரவில்லை. காலதாமதமாக இவ்வாறு கூறும் ஆட்சேபணைகளையும் உறுதிமொழிகளையும் நாங்கள் நிறையவே கேட்டுவிட்டோம். ‘

பிரதமர் அவர்களே, உன்னாவோ மற்றும் கத்துவாவில் பாதிப்புக்கு உள்ளானவர்களின்  குடும்பத்தாரிடம் சென்று நம் அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கோருங்கள்.

கத்துவா வழக்கில் குற்றம்புரிந்த கயவர்கள் மீதான வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை மேற்கொள்ளுங்கள். உன்னாவோ வழக்கில் மேலும் காலதாமதம் செய்யாது, சிறப்புப் புலனாய்வுக் குழு வழிகாட்டுதலின்கீழ் நீதிமன்றத்தை அமைத்திடுங்கள்.

சமூகத்தில் ஒரு பிரிவினர்மீது வெறுப்பை உமிழும் குற்றத்தால் பாதிப்புக்கு உள்ளான அப்பாவிக் குழந்தைகளின் நினைவாக, முஸ்லீம்களுக்கும், தலித்துகளுக்கும் மற்றும் இதர சிறுபான்மை இனத்தவருக்கும், அவர்களுடைய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்   சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உறுதிமொழியைப் புதுப்பித்திடுங்கள். அப்போதுதான், அவர்கள் தங்கள் வாழ்வு குறித்தும், சுதந்திரம் குறித்தும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் முழு உதவியுடன் தங்கள் மீது ஏவப்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அஞ்சாது வாழ இயலும்.

வெறுப்பை உமிழும் குற்றங்களைப் புரிந்திட்டவர்கள் மற்றும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களை நிகழ்த்துபவர்கள் அரசாங்கத்தின் கீழ் செயல்படும்  எவராக இருந்தாலும் அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திடுங்கள்.

வெறுப்புக் குற்றங்கள் எதிர்காலத்தில், சமூகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் தொடராது, தடுப்பதற்கு வகைசெய்யும் விதத்தில், வழிவகை காணும் விதத்தில், சர்வ கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள்.

இவ்வாறு அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்கள்.

(நன்றி: ஸ்குரோல்.இன் இணைய இதழ்)

தமிழில்: ச. வீரமணி

—————————-நன்றி, தீக்கதிர்…………….

Advertisement

shadow

Leave a Reply