shadow

மிழகத்தின் தலையாய பிரச்னையாக மாறியுள்ள தனியார் பள்ளிகள் பிரச்னையில், தீர்வு என்பது குதிரைக் கொம்புதான் என்பதை நிரூபிக்கும் வகையில் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

அரசு நிர்ணயித்த கட்டணத்தின் அளவைத் தாண்டியும் வசூல் வேட்டை நடத்தியும், `எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்` என்ற பெயரிலும் பணம் பிடுங்கும்  தனியார் பள்ளிகள், ஆண்டுதோறும் நடத்தும் கொள்ளை ராஜாங்கம் முடிவுக்கு வந்தபாடில்லை.

இந்த நிலை திமுக ஆட்சியாக இருந்தாலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் தனியார் பள்ளிகளின் கொள்ளைக் கல்வி திட்டம், ஏறுமுகம் மட்டுமே கண்டுவருவதுதான் தற்போதைய எதார்த்த நிலை. அரசுப்பள்ளிகள் ஆங்காங்கே இருந்தாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கும் தனியார் பள்ளி ஆர்வம், அவர்களை பணத்தைத் தண்ணீராய் செலவழிக்க தூண்டுகிறது.

இதனை மாற்றிட, அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த உரிய அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதும், அது குறித்த அக்கறை ஆளும் ஆட்சியாளர்களுக்கு இல்லாமலே இருப்பதும் கல்வி என்பது வியாபாரம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது எனலாம்.

ஆங்கிலவழிக் கல்வியின் மீதான அதீத ஆர்வம் பெற்றோர்களைத் தனியார் பள்ளிகள் பக்கம் ஈர்க்கிறது என்பதை நன்கு அறிந்துகொண்ட கல்வித் தந்தைகள், கடந்த 36 ஆண்டுகளாக ஊர்கள் தோறும் மெட்ரிக்குலேஷன்  கல்விக்கடைகளைத் திறந்து கல்லா கட்டி வருகின்றனர்.

தமிழக அளவில், கடந்த 1976 ஆம் ஆண்டு சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களால்  40 க்கும் குறைவான தனியார் பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது ஆயிரக் கணக்கான மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட்டு கல்வி வணிகம் தடையில்லாமல் நடந்து வருகிறது.மெட்ரிக் பள்ளிகளாகத் தொடங்கிய தனியார் கல்வி நிலையங்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் என்று பல்வகை பெயர்களில் ஆங்கிலவழிக் கல்வி மோகத்தை ஆறாய் ஓடச் செய்துள்ளன.

அரசுப்பள்ளி, தனியார்ப் பள்ளிகள் என்ற கல்வி இடைவெளியை அறவே ஒழிக்கவும் மாணவ மாணவியரின் இளம் உள்ளத்தில் ஏற்றத் தாழ்வு நஞ்சினை விதைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள், கல்வி நலம் விரும்பும் அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனாலும் தமிழகக் கல்விச் சூழலின்  ‘லகான  தனியார்ப்பள்ளி நிர்வாகங்களின் கையில்தான்  இருக்கிறது.

இதனை உடைக்கும் விதமாக சென்னை அடையாறு பால வித்யா மந்திர் பள்ளியில் அதிக அளவில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், பள்ளிக்கு எதிராகப் போராடினர்.இது போன்ற போராட்டங்கள், இன்னும் ஏரளமான பள்ளிகளில் மாணவர் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நீருபூத்த நெருப்பாக உள்ளது.

கல்வி உரிமைச் சட்டப்படி, கல்வி ஏற்றத் தாழ்வை நீக்க சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியாக அரியணையில் அமர்ந்த திமுக, 2010-2011 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்தது. அதன் விளைவாய் 2014 – 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவில் கூடியிருந்தது. தனியார் பள்ளிகள்தான் முதலிடம் பிடிக்கும் என்ற மாயை கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் உடைத்தன.

இந்நிலையில், தமிழகம் முழுக்க உள்ள ஆயிரக்கணக்கான தனியார்ப் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டுவர வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், “அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கான புதிய சட்டத்தை வகுப்பதற்கு நிபுணர் குழு அமைத்த பின் 6 மாதங்களுக்குள் அந்த குழு பரிந்துரை அளிக்கும். அந்தப் பரிந்துரை குறித்து பொது மக்களிடம் கருத்து பெறுவதற்காக, அவர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.பொது மக்கள் தரப்பில் இருந்து ஆட்சேபங்கள் வந்தால், அதை பரிசீலித்து ஒருங்கிணைந்த சட்டத்தை இறுதி செய்து சட்டமன்றத்தின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்படும்.இந்த ஒருங்கிணைந்த சட்டத்தை, இறுதி செய்யும் நடவடிக்கைகளுக்காக,ஓராண்டு காலம் தேவை ” என்று கூறப்பட்டுள்ளது.

இதைப் பரிசீலித்த சென்னை உயர்நீதி மன்றம், “தேவையின்றி காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க நிபுணர் குழு அமைப்பதற்கு,ஒரு குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.ஒரு மாதத்திற்குள் நிபுணர் குழுவை அரசு அமைக்கும் என நம்புகிறோம் ”  என்று கூறியுள்ளது.

தமிழக அரசு ஓராண்டு காலம் காலவரையறை கோரியுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், முந்தைய திமுக ஆட்சியில் மிக காலதாமதமாகக் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை நிறுத்திடவே முனைந்தது.பாடப் புத்தகங்கள் தரமற்று உள்ளன என்று கூறி சமச்சீர் கல்விக்கு மூடுவிழா காண முயன்றது.

ஆனால் இது தொடர்பாக நடந்த வழக்கு, அரசுக்குக் கிடுக்கிப் பிடி போட்டதால் வேறு வழியின்றி,சென்னை உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவின்படி சமச்சீர் கல்வியை அமலில் வைத்தது. அதனால் தனியார்ப் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் சட்டத்தைக் கொண்டுவருவதையும், அதிமுக தலைமையிலான அரசு தாமதப்படுத்திவிடுமோ என்றே கல்வி ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

ஆங்கிலக் கல்வியின் மோகத்தை வளர்ப்பதில் திமுக, அதிமுக இரண்டிற்கும் எந்த வேறுபாடும் காண முடியாது என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் ஏராளம் நடந்துள்ளன.

அனைத்துத் தனியார்ப் பள்ளிகளையும் ஒழுங்குபடுத்த கொண்டுவரப்படும் சட்டம் குறித்து கல்வியாளர் வசந்திதேவியிடம் கேட்டபோது, “இந்தச் சட்டம் அவசியம் கொண்டுவரப்படவேண்டும்.ஏனெனில்,தனியார் பள்ளிகள் அவர்களின் விருப்பம்போல நடக்கின்றன. `மெட்ரிக்குலேஷன் `என்ற பெயரே இருக்கக் கூடாது. சமச்சீர் கல்வி வந்துவிட்ட பிறகு இது தேவையில்லை. ஏற்கெனவே உள்ள கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை எந்தத் தனியார் பள்ளிகளிலும் கடைபிடிக்கப்படவில்லை. கடைபிடிக்கப்படாத பள்ளிகள் மூடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அரசோ, மாநில அளவில் அரசுப்பள்ளிகளைத்தான் மூடிவருகிறது” என்கிறார் காட்டமாக.

பள்ளிக் கல்வித்துறையும், தனியார் கல்வி நிறுவனங்களும் இணைந்தே இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாகவும்,  தாய்மொழிவழிக் கல்வியை புறந்தள்ளி, ஆங்கில வழிக் கல்வியை பரப்பி தமிழகத்தில் கல்வியை நாசமாக்கிவிட்டது என்றும் வேதனை தெரிவித்தார் கல்வியாளர் வசந்தி தேவி.

நீதிமன்றத்தில் கூறியபடி அரசு நடந்துகொள்ளுமா? தமிழகம் கல்வியில் வளரவும் ஏற்றத்தாழ்வு அற்ற கல்வியைக் கொடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதை எதிர்காலம்தான் சொல்லும் என்றாலும், இது விஷயத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?  என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில்.

என்ன செய்யப்போகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா?  – நன்றி:

Advertisement

shadow

Leave a Reply