shadow

நிதித்துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கார்ப்பரேட்டுகள் மோசடி செய்திடும் நடவடிக்கைகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு நிதித்துறையில் நடைபெறும் மோசடிகளைப் பார்க்கும்போது 1980களில், வில்லியம் கே.பிளாக் என்பவர் எழுதிய, “ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க வேண்டுமென்றால் சொந்தமாகவே ஒரு வங்கியை வைத்திருப்பதே சிறந்த வழி : எப்படி கார்ப்பரேட்டுகளும், அரசியல் வாதிகளும் எஸ் & எல் இண்டஸ்ட்ரியைக் கொள்ளையடித்தார்கள்?” (“The Best Way to Rob a Bank is to Own One: How Corporate Executives and Politicians Looted the S&L Industry”) என்ற நூல்தான் நினைவுக்கு வருகின்றது.

இந்திய வங்கிகளில் நடைபெறும் மோசடிகளைப் பார்க்கும்போது, சென்ற ஆண்டு அதிகார பூர்வமாக அரசாங்கத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் ‘இரட்டை இருப்புநிலைக் குறிப்பு (TBS-Twin Balance Sheet) பிரச்சனை’தான் மீண்டும் நம் நினைவுக்கு வருகிறது. அந்த அறிக்கையில், வங்கிகளின் செயல்படா சொத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகளைத் தெரிவித்திருந்தது. இவ்வாறு செயல்படா சொத்துக்களை அதிகரித்து வருபவர்கள் கார்ப்பரேட்டுகள்தான். கார்ப்பரேட்டுகளின் மோசமான பேரங்கள் காரணமாக, இந்த ஆண்டு வங்கிகளுக்கு வர வேண்டிய வராக்கடன்கள் மேலும்  அதிகரித்து, இந்திய நிதி அமைப்புக்கே ஆழமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு எளிதாக வங்கிகள் அளித்திடும் கடன் வசதிகளை துஷ்பிரயோகம் செய்து கோடி கோடியாகக் கொள்ளையடிக்கின்றன?  வங்கிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான கள்ளக் கூட்டணி முன்பிருந்ததைவிட இப்போது மிகவும் ஆழமாகி இருக்கிறது. நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி என்பவர்களின் பல்வேறு ஆபரணங்களின் குழுமம் வெளிநாடுகளிலிருந்து விலைமதிப்புள்ள  ஆபரணங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக, வங்கிகளிடமிருந்து 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்றிருப்பது என்பது கிட்டத்தட்ட வங்கிகளை ‘கொள்ளையடித்ததற்கு’ இணையான ஒன்றேயாகும். ஏனெனில் இப்பேர்வழிகள் இப்பணத்தை வங்கிகளிடமிருந்து பெறும்போதே, அவற்றைத் திருப்பித்தரப் போவதில்லை என்று நன்கு அறிந்தே பெற்றிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அந்த வங்கிகளைத் தங்களின் சொந்த வங்கிகளைப் போலவே பாவித்துக்கொண்டு கடன் தொகைகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறு கார்ப்பரேட்டுகள் வங்கிகளின் பணத்தைக் ‘கொள்ளை’யடித்துச் செல்வதைத் தடுக்கக்கூடிய அளவிற்கு இந்திய வங்கிகளிடம் அதிகாரபூர்வமான கட்டுப்பாடுகளோ அல்லது விதிமுறைகளோ இல்லை என்பதைப் பார்க்கும்போது, வங்கிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயான கள்ளப்பிணைப்பு, நாட்டை ஆட்சி செய்வோரின் ஏற்பாடுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட,  கிட்டத்தட்ட ஒரு நடைமுறையாகவே மாறியிருப்பதுபோலவே தோன்றுகிறது.  கிரிசில்-அஸ்ஸோசெம் (Crisil-Assocham) தாக்கல் செய்துள்ள மதிப்பீடுகளின்படி, சென்ற ஆண்டு வங்கிகளுக்கு வரவேண்டியிருந்த மொத்த செயல்படா சொத்துக்கள் 8 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 9.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், வங்கிகள் கொடுக்கும் மொத்த முன்பணங்களில் செயல்படா சொத்துக்கள் என்பவை சுமார் 10.5 சதவீதமாகும். இதன்னியில் அழுத்தம் தரக்கூடிய சொத்துக்கள் (stressed assets) தனி. அதாவது, அழுத்தம் தரக்கூடிய சொத்துக்கள் என்றால், செயல்படா சொத்துக்கள் + மாற்றியமைக்கப்பட்ட கடன்கள் + தள்ளுபடி செய்யப்பட்ட தொகை என்பதாகும். இது கூடுதலாக 11.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரைக்குமே, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2017 மார்ச் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் மட்டும், மொத்த செயல்படா சொத்துக்கள் (GNPA) என்பவை 12.5 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.  எனவே நிதித்துறையின் நிலைமை நம் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய  அளவிற்கு கவலையை அளிக்கக்கூடியதாக மாறி இருக்கிறது.

நம் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் மேற்கொண்டுவரும் மோசடியான நடைமுறைகள் இவற்றுக்குப் பெரிதும் காரணங்களாகும். நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை(Financial Stability Report)யை, மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளிலிருந்து, வங்கிகளில் செயல்படா சொத்துக்களில் சுமார் 85 சதவீதம் 50 கார்ப்பரேட்டுகள் தரவேண்டிய தொகைகளாகும். இவர்கள்தான் 2016 மூன்றாவது காலாண்டு முடிவில்,  வங்கிகளிடமிருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் கடன் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு கடன்பெற்ற கார்ப்பரேட்டுகளில் 41 சதவீதத்தினர் அதற்கான வட்டிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கட்டவில்லை.  2017ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் இவ்வாறு வட்டி செலுத்தவில்லை. இவ்வாறு வங்கிகளிடமிருந்து கடன்பெற்ற கார்ப்பரேட்டுகளின் நிறுவனங்கள்  அதன்மூலம் தங்கள் வங்கிகளின் வளர்ச்சி விகிதங்களையும் அதிகரித்திடவில்லை. செயல்படா சொத்துக்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

இவ்வாறு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, வங்கிகளும் கார்ப்பரேட்டுகளும் கூட்டுக் களவாணிகளாக மாறி வங்கிகளில் உள்ள பணத்தைச் சூறையாடியதைத் தொடர்ந்து, வங்கிகளின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகியிருக்கக்கூடிய நிலையில், வங்கிகளில் உள்ள சாமானியர்களின் சேமிப்புத்தொகைகளில் கை வைப்பதற்காக, மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதில் ஒன்று, வங்கிகளில் சேமிப்பாளர்களின் சேமிப்புத்தொகையில் அவர்களின் நடைமுறைச் செலவுக்காக ஒரு லட்சம் ரூபாயை மட்டும் கைவைக்காமல் அதற்குமேல் உள்ள தொகைகளை அவர்கள் அறியாமலேயே எடுத்துக்கொள்வதற்கான சட்டமுன்வடிவை (FRDA Bill) கொண்டுவருவதாகும்.

இச்சட்டமுன்வடிவிற்கு எதிராக பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நாடு முழுதும் நடந்ததைத்தொடர்ந்து மத்திய அரசு தற்காலிகமாக அதை ஒத்திவைத்திருக்கிறது.வங்கிகளில் உள்ள நிலைமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்களின் முழங்காலுதறல் எதிர்வினை இந்த லட்சணத்தில் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரநிலைமை இந்த அளவிற்கு மோசமாகச் சென்றிருப்பதற்கு வங்கிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயான கள்ளப்பிணைப்பின் மூலமாக வங்கிப்பணத்தைச் சூறையாடிச் செல்வதைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் நாட்டின் நடைமுறைச் சட்ட விதிகள் இல்லாதிருப்பது ஒரு காரணம் என்றால், அவ்வாறு வங்கிப்பணத்தைக் கொள்ளையடித்துச் செல்பவர்களுக்கு அரசே உதவி செய்து அனுப்பி வைப்பதும் ஒரு காரணமாகும்.

(கட்டுரையாளர், புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக, பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தின், முன்னாள் பேராசிரியை.)

நன்றி: ‘தி ஒயர்’ இணைய இதழ்

(தமிழில்: ச.வீரமணி) 

————————————————நன்றி, தீக்கதிர்——————————————————————–

Advertisement

shadow

Leave a Reply