shadow

மத்தியில் நரேந்திரமோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியை துவக்கிவிட்டது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள துண்டு நிலத்தையும் பிடுங்க நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை பிரயோகிக்க துடிக்கிறது. மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இந்த சட்டங்கள் நிறைவேறுவது தாமதம் ஆனாலும் கடைசிகட்ட ஆயுதமாக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டவும் தயங்கமாட்டோம் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த நிலையில் விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு எதிரான மின்சார திருத்த மசோதா 2014ஐ வரும் நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த மசோதாவை தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 18 மாநில அரசுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. பல்வேறு கட்சிகள் தங்களது பிரதிநிதிகள் மூலமாக நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

மின்சார உற்பத்தி முழுவதையும் தனியாரிடம் ஒப்படைப்பது என்பதுதான் இந்த திருத்த மசோதாவின் முக்கியநோக்கமாகும். அப்படி செய்தால் பல நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்வார்கள் என்றும் அதனால் சந்தையில் போட்டி ஏற்பட்டு மின்சார விலைகுறையும் என்பது அரசின் வாதம். ஆனால் இங்கிலாந்தில் மர்கரெட் தாட்சர் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற முறை அமல்படுத்தப்பட்டு தோல்வியில்தான் முடிந்தது. காரணம் மின்சார விலை குறையவில்லை. மாறாக அதனை உற்பத்தி செய்த தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டு ஏற்படுத்திக் கொண்டு விலையை நிர்ணயித்தார்கள்.

இதனால் அரசாங்கம் யாரிடம் மின்சாரம் வாங்கினாலும் அதிகமான விலை கொடுக்கவேண்டியதாயிற்று. அதே போல் மும்பையிலும் இந்த திட்டம் தோல்வியில்தான் முடிந்தது.மின்சாரத்தை தனியார் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்வார்களாம். அதை வாங்கி மின்வாரியங்கள் விநியோகம் மட்டும் செய்யவேண்டுமாம். பணத்தை வசூல் செய்வதை தனியார் நிறுவனங்கள் பார்த்துக்கொள்வார்களாம்.

தனியாரிடம் வசூலை ஒப்படைத்தால் வசூலிக்கப்படும் பணம் முறையாக அரசுக்கு வந்துசேரும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? மேலும் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் விவசாயிகளுக்கும் ஒரு மின்விளக்கு பயன்படுத்தும் குடிசை மக்களுக்கும் இலவசமாக மின்சாரத்தை வழங்குகின்றன.

தனியாரிடம் போனால் இவையும் கிடைக்காது. எனவே தோல்வியடைந்த ஒரு திட்டத்தை நாட்டுமக்கள் தலையில் திணிப்தை அரசு கைவிட்டு இன்னறும் மின்சாரத்தையே பார்த்திராத 30 கோடி மக்களுக்கும் மின்சாரம் கிடைக்க செய்வதில் கவனம் செலுத்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கமுடியும். மக்களின் அடிப்படைத் தேவையானமின்சாரத்தை மக்களுக்கு உறுதிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. அதில் இருந்து விடுபடுவதையும் அனுமதிக்கலாகாது.

- நன்றி

theekathirlogo

Advertisement

shadow

Leave a Reply